×

உங்கள் மகன் எங்கே? தேடுங்கள்: ரஷ்ய தாய்களுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

உக்ரைனில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வீரர்களை சிறை பிடித்து இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த வாரம்  அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘ரஷ்ய தாய்மார்களே,  உக்ரைனில் சிறை பிடிக்கப்பட்டுள்ள உங்களின் மகன்களை அழைத்து செல்லலாம்,’ என தெரிவித்தார். முதலில் தனது வீரர்கள் யாரும் பிடிபடவில்லை என்று கூறிய ரஷ்ய ராணுவம், பின்னர் அதை ஒப்புக் கொண்டது. மேலும், ரஷ்ய படையின் தொழில்முறை வீரர்கள் மட்டுமின்றி, ரஷ்யாவை சேர்ந்த வாலிபர்களையும்  கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பி இருப்பதாக ரஷ்யா நேற்று முன்தினம் முதல் முறையாக ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில், ‘ரஷ்ய தாய்மார்களே... உங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடுங்கள். உங்கள் பிள்ளைகள் கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பப்படுகிறார்கள். அதை தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் உக்ரைனில் கொல்லப்படுவதையும், சிறை பிடிக்கப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. இந்த போரை நாங்கள் விரும்பவில்லை என்றாலும், எங்களை தற்காத்து கொள்வதற்காக உங்கள் பிள்ளைகளையும் தாக்க வேண்டியுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

* குண்டு சத்தங்களுக்கு மத்தியில் உயிர் தப்பி பிறந்த குழந்தைகள்
மரியுபோல் நகரில் கடந்த புதன்கிழமை இரவு மகப்பேறு மருத்துவமனைகள் மீது வெடிகுண்டு வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. சர்வதேச போர் விதிமுறையை மீறும் இந்த செயலுக்காக உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மரியுபோலில் தாக்குதலுக்கு மத்தியில் மீட்கப்பட்ட 2 கர்ப்பிணிகளுக்கு வேறொரு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், விஷேகிர்ஸ்காயா என்ற இளம்பெண் விளம்பர மாடல் ஆவார்.

மரியுபோல் மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தும் சம்பவத்திற்கும் முன்பாக, விஷேகிர்ஸ்காயா நிறைமாத கர்ப்பத்துடன் கையில் பிளாஸ்டிக் பையுடன் முகத்தில் சில இடங்களில் ரத்த காயத்துடன் இடிந்து போன மருத்துவமனை படிக்கட்டு வழியாக நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை ஏபி ஊடகம் வெளியிட்டுள்ளது. இதே போல மற்றொரு கர்ப்பிணியை உக்ரைன் வீரர்கள் ஸ்டெச்சரில் வைத்து அழைத்துச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மிகப்பெரிய ஆதாரங்களாக உருவெடுத்துள்ளன. ஆனால், இந்த புகைப்படங்கள் பொய்யானவை என ரஷ்யா தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது.

Tags : Gelensky , Where is your son? Search: Gelensky appeal to Russian mothers
× RELATED ரஷ்யப்படைகள் முற்றுகை வார்த்தைகளால்...